அரசுக்கு முண்டுகொடுக்காதீர்கள்! - சுதந்திர கட்சியிடம் விமல் கோரிக்கை
"ராஜபக்ச அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்த அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இனியும் முண்டுகொடுக்காமல் தீர்க்கமான முடிவெடுத்து வெளியேற வேண்டும்."
- இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாமும் பொறுமை காத்து அரசுக்கு முண்டுகொடுத்து வந்தோம். இறுதியில் எமது அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி பிடுங்கி எடுத்தார்.
தற்போது அமைச்சர்கள் தாமாகவே பதவியிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர். சுதந்திரக் கட்சியினர் இனியும் இந்த அரசுக்கு முண்டுகொடுக்காமல் தீர்க்கமான முடிவெடுத்து வெளியேற வேண்டும்.
ராஜபக்ச அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரைச் சமாளிக்கவே சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்துகின்றார்.
இதைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகளும் மாநாட்டைப் புறக்கணித்துள்ளன. எமது கட்சியும் மாநாட்டுக்குச் செல்லாது.
சுதந்திரக் கட்சியுடனோ அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ கூட்டுச் சேர்வது தொடர்பில் நாம் இன்னமும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை. நாம் தற்போது மக்கள் பக்கம் நின்றே செயற்படுகின்றோம்" - என்றார்.