நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்- ஜனாதிபதி

Prabha Praneetha
2 years ago
நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்- ஜனாதிபதி

தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை மையமாகக்கொண்டு, இணைய வழியாக (Online) இடம்பெற்ற “வங்காள விரிகுடா சார்ந்த பல்தரப்பு தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” (பிம்ஸ்டெக்) அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த ஆண்டு மாநாடு இலங்கையில் நடைபெற்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வங்காள விரிகுடாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தாய்லாந்தின் பேங்கொக் தலை நகரத்தில் 1997 ஜூன் மாதம் பிம்ஸ்டெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, மனித வள மேம்பாடு, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்வி, தொழில் மற்றும் தொழிநுட்ப துறைகளுக்காக பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவதும் பொருளாதாரம், சமூகம், தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் செயற்பாட்டு ரீதியான மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பைபும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்ற சுற்றுலா கைத்தொழிலானது பிம்ஸ்டெக் நாடுகளுக்கு பாரிய ஊக்கத்தை அளிக்கிறது.

எனவே சுற்றுலா கைத்தொழில் தொடர்பில் பிம்ஸ்டெக் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.