மிரிஹானவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது: மனித உரிமைகள் ஆணையம்

Prathees
2 years ago
மிரிஹானவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது: மனித உரிமைகள் ஆணையம்

நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் நேற்று முன்தினம் (31) இரவு இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கூடி சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்தினாலோ அல்லது வேறு தரப்பினராலோ மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அன்றைய தினம் பரிந்துரைகளை வழங்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எந்த தரப்பினர் முறைப்பாடு  அளித்தாலும் விசாரணை நடத்த முடியும் என பேச்சாளர் தெரிவித்தார்.

மிரிஹான பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.