மக்களின் தேவைகளைப் புறக்கணித்து பொறுப்பில்லாது சுயநலமாக செயற்படுகின்றது அரசாங்கம் – பேராயர்

Mayoorikka
2 years ago
மக்களின் தேவைகளைப் புறக்கணித்து பொறுப்பில்லாது சுயநலமாக செயற்படுகின்றது அரசாங்கம் – பேராயர்

நாட்டின் அரசியல் தலைவரை மாற்றி அமைத்தால் மாத்திரம் போதாது. எமது நாட்டிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் வியூகங்கள், கொள்கைகள் என அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாடு இன்று எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என கொழும்பு பேராயர் மெல்கம்  கர்தினால்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொருளாதார  நெருக்கடி காரணமாக பாரியளவில் சிக்குண்டு அல்லறும் மக்கள் மீது  மேலும் அழுத்தங்களை திணிக்காதிருக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதுடன், ஜனநாயக ரீதியாகவும் , அகிம்சை வழியிலும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் மக்களின் முயற்சிகளை ஒடுக்காமல் இருக்குமாறும் மக்களுக்கான தேவைகளை தங்களது பொறுப்புணர்ந்து அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பலரும் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பது எனது தார்மீகக் கடமையாகும்.

நீண்ட காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து வருகின்ற அரசாங்கமானது, பொறுப்பற்றதும் உணர்வற்றதுமான சுயநலமான விதத்தில் செயற்பட்டு வருகிறது.

மக்கள் பல்வேறு  விதமான சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், கத்தோலிக்க  திருச்சபையானது துன்பப்படுகின்ற மக்களுக்கும்  ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் என்றென்றும் ஆதரவாக இருக்கும்.

அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நீண்ட வரிசைகளில் மக்கள் தவித்து வருகின்றமை கவலையளிக்கிறது. இந்த துரதிஷ்ட வசமான சூழலிலும், லஞ்சம், ஊழல்  என்பன தொடர்ந்து கொண்டே உள்ளன.

பொதுச் சொத்துக்கள் , தேசிய வளங்கள் கண்டுகொள்ளப்படாமல்  விற்கப்படுகின்றன. மக்களிடம் கருத்துக்களைகூட கேட்பதில்லை.

பொது மக்கள் பலரும் மனச்சோர்வடைந்து  வாழ்க்கைச் சிக்கல்களால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், ஆட்சியாளர்கள் சூழ்நிலையை உணர்ந்து  விரைவில் தீர்வொன்றை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

சுதந்திர அரச நிறுவனமான மத்திய வங்கி, அரசியல் தலைவர்களது  கைக்கூலிகளாக மாறியுள்ளது.  வெளிப்படைத்தன்மை இல்லாத நியாமற்ற  மற்றும்  தன்னிச்சையான  ஆட்சியையே  இன்று நாம் பார்க்கின்றோம்.

அனைத்து அரச நிறுவனங்களையும் சுதந்திரமாக  இயங்கச் செய்ய வேண்டும். இதில், அரசியல்வாதிகளின் கூட்டாளிகளை அகற்றி, துறைசார் நிபுணர்களை நியமித்து அரச நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க செய்ய வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், தன்னிச்சையான துன்புறுத்தல்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களது  கடமைகளை  மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டியது அவசியமாகும் ” என்றார்.