ஊரடங்கு நேரத்தில் உணவு இன்றி கூச்சல், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்கள் இந்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் மாகாணத்தில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாடுகளை மாகாண அரசு கடுமையாக்கியுள்ளதால் ஷாங்காய் மக்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து கூச்சல் எழுப்பி வருகின்றனர்.
வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போதிய உணவு வழங்கப்படாதலும், உணவின்றியும் ஷாங்காய் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதால் அங்காங்கே மோதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக குழந்தைகளையும் அதிகாரிகள் தனியே அழைத்து செல்வதால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஷாங்காய் நகரில் உணவு இன்றியும், மன உளைச்சலிலும் இருந்த நபர் தனது மனைவியை தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு இடங்களில் மக்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை ஷாங்காய் மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனாலும், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சீனாவின் ஷாங்காயில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.



