இந்த கடினமான நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு செழிப்பான புத்தாண்டாக மலரட்டும்! எதிர்க்கட்சித் தலைவர்

Prathees
2 years ago
இந்த கடினமான நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு செழிப்பான புத்தாண்டாக மலரட்டும்! எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டின் மாபெரும் கலாசார விழாவாகக் கருதப்படும் சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சூரியன் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறுவது சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் விடியலாக கருதப்படுகிறது. சிங்கள மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய சூரிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை ஆகும். சிங்கள இந்து புத்தாண்டை இரு மதங்களைச் சேர்ந்த இரு சமூகங்களும் இணைந்து கொண்டாடும் ஒரு தனித்துவமான பண்டிகையாகவும் குறிப்பிடலாம்.

இந்நாட்டு மக்கள் சித்திரை மாதத்தை செழிப்பான மாதம் என்றும் அழைக்கின்றனர். அந்த மாதத்தை அடிப்படையாக வைத்து இலங்கை மக்கள் புத்தாண்டை வெகுகாலமாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து எமது நாட்டின் சிங்கள தமிழ் புத்தாண்டு உதயமானது குயிலின் ஓசையுடன் அல்ல மாறாக கொரானாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறும் அறிவிப்புகளின் ஒலியுடன்தான் புத்தாண்டு மலர்ந்தது.

செழிப்பான பாடத்தை புகட்டும் ஒரு தனித்துவமான பண்டிகையான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடியலின் போது, சுத்தமான உணவை சமைக்கக் கூட தயக்கம் காட்டும் அளவுக்கு மக்கள் மட்டுப்படுத்தப்பட்டு சிக்கித் தவிக்கின்றனர்.

முழு நாடும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், அவ்வாறே எமது நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கைத் தரம் அசாதாரணமான முறையில் சவாலுக்கும் உள்ளாகியுள்ளது.

தன்னிறைவு பெற்ற பொருளாதாரமாக இருந்த நம் நாடு, தற்போது கண்ணீரினால் நனையும் நாடாக மாறியுள்ளதால், நாட்டு மக்கள் புத்தாண்டை குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

ஒருபுறம், மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நிற்கும் அதே வேளையில், மறுபுறம், இலங்கையின் இளைய தலைமுறையினர் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.

அண்மைக்கால வரலாற்றில் ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் மிக மோசமான சூழ்நிலையின் விளிம்பிற்கு நாம் வந்துள்ளோம், மேலும் சிறந்த எதிர்காலம் என்ற கனவை நனவாக்க நமது நாட்டின் அன்பான மக்கள் போராடி வருகின்றனர்.

மனித நாகரீகம் காலத்துக்குக் காலம் பரிணமித்து, கலாச்சாரம் மனிதனையும் பரிபூரணமாக்கி, அவர்களின் தேசத்துக்கே உரித்தான கலாச்சார விழாவின் மூலம் அவர்களை மேலும் நேர்வழியில் அழைத்துச் செல்கிறது.

இத்தகைய விழுமியங்கள் நிறைந்த கலாசார விழாவாகவும் சிங்கள இந்து புத்தாண்டு பண்டிகை திகழ்கிறது.

பெரும் தியாகங்களைச் செய்தவர்களை மீண்டும் மீண்டும் தியாகம் செய்யச் சொல்வதை விட நடைமுறையில் ஆட்சியாளர்கள் இந்தத் தியாகத்தைச் செய்தல் இத் தருணத்தில் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டுவதுடன் “இந்தக் கடினமான காலகட்டம் முடிவடைந்து வளமான, அமைதியான, நல்லிணக்க மற்றும் உண்மையான சுபீட்சமிக்க நாளைய விடியலை காணும் கனவு நனவாக மலர வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

என எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.