இன்றைய வேத வசனம் 22.04.2022: தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் 2:15
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தினத்தன்று “பூமி தினம்” அனுசரிக்கப்படுகிறது. சமீப காலமாய், ஏறத்தாழ இருநூறு நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள் அன்றைய தினத்தில் பயிற்சி மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர்.
ஒவ்வொரு வருடமும், பூமி தினம் இத்தகைய வியத்தகு கிரகத்தை பராமரிக்கும் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் இந்த ஆண்டு நிகழ்வை காட்டிலும் மிகப் பழமையானது. அது சிருஷ்டிப்பின் நாட்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது.
ஆதியாகமத்தில், தேவன் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்து, மனிதன் வாழ்வதற்கு பூமியை சிருஷ்டித்தார் என்று அறிகிறோம். அவர் மலைச்சிகரங்களையும், பசுமையான சமவெளிகளையும் படைத்ததுமன்றி, தேவன் ஏதேன் தோட்டத்தையும் சிருஷ்டித்தார். அது உணவு, உறைவிடம், மற்றும் மகிழ்ச்சியை அதின் குடிகளுக்குக் கொடுக்கும் அற்புதமான ஒரு இடம் (ஆதியாகமம் 2:8–9).
தன் பிரதான படைப்பான மனிதனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் (வச. 8,22). பின், “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” (வச. 15) வேண்டுமென்ற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார்.
ஆதாமும், ஏவாளும் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட பின்னர், தேவனுடைய சிருஷ்டிப்பைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாய் மாறியது (3:17–19). ஆனால் இந்நாள்வரைக்கும் தேவனே நம் பூமியையும், அதின் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார் (சங்கீதம் 65:9–13). நம்மையும் அதையே செய்யுமாறு எதிர்பார்க்கிறார் (நீதிமொழிகள் 12:10).
நாம் நெருக்கடியான நகரத்தில் வசிக்கிறோமோ அல்லது கிராமத்தில் இருக்கிறோமோ, தேவன் நம்மை நம்பிக் கொடுத்த பகுதிகளை பராமரிக்கும் கடமை நமக்குண்டு. தேவன் நமக்குக் கொடுத்த இந்த பூமி பரிசு என்னும் நன்றிக்கடனுக்காக அதை பராமரிக்கும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்போம்.