இன்றைய வேத வசனம் 26.04.2022: உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 தீமோத்தேயு 4:12
சாதிப்பதற்கு, இளம் வயது தடையில்லை. அது பதினோரு வயதேயான மிகாய்லாவையும் தடைசெய்யவில்லை. எலுமிச்சை பாணம் அருந்துவதற்கு பதிலாக மிகாய்லா எலுமிச்சை பாணத்தை வியாபாரமாக்கினாள்.
“மீ அண்ட் தி பீஸ் லெமெனேட்” என்ற அவள் வியாபாரம், தன் பாட்டியின் சமையல் குறிப்போடு ஆரம்பமாகி, ஷார்க் டேங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களால் 60,000 டாலர்கள் முதலீட்டை ஈட்டினாள். மேலும் அவள் பிரபலமான மளிகை வியாபாரியின், ஐம்பத்தைந்து கடைகளில் தன்னுடைய எலுமிச்சை பாணத்தை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.
மிகாய்லாவின் வேகமும், அவளது லட்சியங்களும், “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு” (1 தீமோத்தேயு 4:12) என்று தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை நமக்கு நினைப்பூட்டுகின்றன.
தீமோத்தேயு, மிகாய்லாவை போல சிறுபிள்ளையல்ல; எனினும், தன் சபையாரோடு ஒப்பிடுகையில் அவர் இளையவராகவே இருந்தார். ஜனங்கள் தன்னை அலட்சியம் செய்வதைக்குறித்து வேதனைப்பட்டார்.
மேலும் அப்போஸ்தலன் பவுலிடம் அவர் பயின்றிருந்தாலும், தங்களை வழிநடத்தும் அளவிற்கு அவர் முதிர்ச்சியடையவில்லை என சிலர் கருதினர். அவருடைய தகுதிகளை பிறருக்கு நிரூபித்துக்காட்டும்படிக்கு பவுல் அவரை அறிவுறுத்தவில்லை; மாறாக, அவருடைய வார்த்தைகள், வாழும் முறை, சபையினரை நேசித்தல், விசுவாசத்தை வாழ்ந்து காட்டுதல் மற்றும் கற்போடு இருத்தல் (வச. 12) ஆகியவற்றால் அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியை நிரூபிக்க தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார்.
இத்தகைய முன்மாதிரியாக அவர் இருந்தால், அவரைப் போதகராக, மேய்ப்பராக எவரும் அசட்டை செய்யமுடியாது.
நாம் எந்த பருவத்தினராயினும், இவ்வுலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கிறிஸ்துவை மையப்படுத்தி முன்மாதிரியாக நாம் இருக்க, தேவனே நமக்கு தேவையானவற்றை அருளுகிறார். சுவிசேஷத்தால் நம் வாழ்வை வடிவமைக்கிறார். ஆகவே நாம் பதினேழு வயது வாலிபனோ, அல்லது எழுபது வயது வயோதிகரோ, பிறரோடு சுவிசேஷம் பகிர நாம் தகுதியானவர்களே.