ஜனாதிபதிக்கு எதிராக பிரதமர் வாக்களிப்பார்!அவரே டுவிட்டரில் தெரிவிப்பு

#SriLanka
Shana
2 years ago
ஜனாதிபதிக்கு எதிராக பிரதமர் வாக்களிப்பார்!அவரே டுவிட்டரில் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு எடுப்பது என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்து பிரதமர் இவ்வாறு தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கையில்,

"இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்திப் பிரேரணையை உடனடியாக விவாதிப்பதா என்பதை முடிவு செய்வதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்திப் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள்.

எனவே, இது தோல்வியடையும் என நான் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு 16ஆம் திகதியே அறிவுரை கூறியிருந்தேன். ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தை இன்றே நடத்துவதற்கு அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இன்னும் சில நாள்களில் இந்த அரச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது ஜனாதிபதிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிருப்திப் பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதைத் தடுக்கின்றார்கள்.

எதிர்க்கட்சிகள் சிறந்த மூலோபாய அணுகுமுறையை முற்போக்காகப் பயன்படுத்தினால் நல்லது. எனினும், கடந்த வாரம் தெரிவித்தபடி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குத்துக்கரணம் அடித்துவிட்டார் என்ற சாரப்பட நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. நேற்றுக் காட்டமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்குமாற்போல் இந்த ருவிட்டர் பதிவைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கின்றார்.