பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்ய தீர்மானம்

Prathees
2 years ago
பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்ய தீர்மானம்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்தந்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களுடன் கலந்தாலோசித்து அப்பகுதிகளுக்கு உரிய பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு அமைச்சு, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் காலியாக இருக்கக் கூடாது என அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.

முதலீட்டுக்காக கொடுத்த நிலங்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்தால், உடனடியாக அந்த நிலங்களை திரும்பப் பெற வேண்டும்.

அவற்றை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

முதலீட்டிற்காக காணிகளை ஒதுக்கீடு செய்யும் போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மேம்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அடுத்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை அத்தியாவசிய பொருட்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.