உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை – இலங்கை மக்களுக்கு பேராசியர் எச்சரிக்கை!

Nila
2 years ago
உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை  – இலங்கை மக்களுக்கு பேராசியர் எச்சரிக்கை!

உலகில் இரு வார காலத்திற்குள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 92 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்நோய் பரவல் ஏற்படுமா இல்லையா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது.

எனினும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம் இதனை இலகுவாகக் கண்டறிய முடியும் என்பதோடு, மூலக்கூற்று பரிசோதனைகள் ஊடாக இதன் பிறழ்வுகளையும் இனங்காண முடியும் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோய் தொடர்பில் இலங்கை நிலைவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையில் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே இந்நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நாடுகளில் அசாதாரணமான முறையில் குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்படுவதற்கான காரணம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

காரணம் இந்நோய் ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகளவில் காணப்பட்டது. அந்நாடுகளில் இடைக்கிடையில் இந்நோய் பரவல் பதிவாகும்.

ஆனால் இம்முறை எவ்வித போக்குவரத்து தொடர்புகளும் இன்றி புதிய நோயாளர்கள் ஏனைய நாடுகளிலும் இனங்காணப்படுகின்றனர்.

குறுகிய காலத்திற்குள் 92 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை அசாதாரணமானதாகும். இந்நோயை வழமையான பி.சி.ஆர். பரிசோதனைகளின் ஊடாக இனங்காண முடியும்.

அரச வைத்தியசாலைகளிலும் , சகல ஆய்வுகூடங்களிலும் இதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். அதற்கமைய இந்நோயை இலகுவாக இனங்காண்பதற்கான வசதிகள் நாட்டில் உள்ளன.

பரிசோதனைக்கு அவசியமான மருத்துவ பதார்த்தங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரமளவில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதனை இனங்காண்பதற்கான மூலக்கூற்று பரிசோதனைக்கான வசதிகளும் இலங்கையில் உள்ளன.

அதன் மூலம் இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸினுடைய பிறழ்வுகளையும் இனங்காண முடியும். இதன் இரு பிரதான பிறழ்வுகள் உள்ளன.

அவற்றில் ஒன்று கொங்கோபேசின் கிளேட் ஆகும். மற்றையது தென் ஆபிரிக்க கிளேட் ஆகும். தற்போது பாரதூரத்தன்மை குறைவான பிறழ்வே இனங்காணப்பட்டுள்ளது.

2018 – 2019 இல் காணப்பட்ட பிறழ்வே தற்போதும் இனங்காணப்பட்டுள்ளதாகவும், பாரியளவில் திரிபுகள் ஏற்படவில்லை என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட எவரும் இனங்காணப்படவில்லை. உலகிலும் பெரும்பாலான நாடுகளில் பரவவில்லை.

விரைவில் குணமடையக் மூடிய நோய் அறிகுறிகளே இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும். இந்த நோய் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளையுடைய ஏனைய நோய்களும் இலங்கையில் காணப்படுகின்றன. உதாரணமாக டெங்கு நோய் ஏற்படும் போது தென்படும் அறிகுறிகளும் இதனை ஒத்ததாகவே காணப்படும்.


எனவே நாட்டில் இல்லாத நோய் பற்றி தேடுவதை விட, வித்தியாசமான நோய் அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது பொறுத்தமானது.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணுதல், பௌதீக தொடர்பு மற்றும் அவர்கள் உபயோகித்த பொருட்களை உபயோகித்தல் என்பன மூலம் இந்நோய் ஏனையோருக்கும் பரவக் கூடும். எனினும் கொவிட் தொற்றைப் போன்று மிகவும் வேகமாக பரவக் கூடியதல்ல.

இதற்கான சிகிச்சை முறைமைகள் உள்ளன. அத்தோடு இந்நோய்க்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் உள்ளன.

அவை அங்கீகாரம் பெற்றவையாகவும் உள்ளன. குழந்தைகள், கர்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானோருக்கு இந்நோய் ஏற்படுமாயின் அவர்களில் கனிசமானளவானோருக்கே பாரதூரமான நிலைமைக்கு செல்ல வேண்டியேற்படும். பெருமலவானோருக்கு குறைந்தளவாக பாதிப்புக்களே ஏற்படும்.

இது வரையில் கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்நோயானது கொவிட் தொற்றுறுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான பாதிப்புக்களையே கொண்டுள்ளது.

கொவிட் கட்டுப்படுத்தல் அனுபவத்துடன் இந்நோயையும் எதிர்கொள்ளக் கூடிய திறன் இலங்கைக்கு உள்ளது. இதற்காக அடிப்படை வழிமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் இந்நோய் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எவ்வாறிருப்பினும் ஏற்கனவே சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இந்நோயிலிருந்து பாதுகாப்பு பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 40 – 45 வயதுக்கு மேற்பட்ட தரப்பினருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றார்.