சென்னை அம்பத்தூரில் 20,000 லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல்; போலீஸ் கடும் எச்சரிக்கை

#India #Tamil Nadu #Fuel
சென்னை அம்பத்தூரில் 20,000 லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல்; போலீஸ் கடும் எச்சரிக்கை

அம்பத்தூர், திருநின்றவூர் பகுதியில் கலப்பட எண்ணெய் பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 20,000 லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து காவல் ஆய்வாளர் முகேஷ்ராவ் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் இரு கிடங்குகளில் எவ்வித ஆவணமும் இன்றி கலப்பட எண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 18,200 லிட்டர் கலப்பட கறுப்பு ஆயில், 1,100 லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் டீசல் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்த திருநெல்வேலி மாவட்டம் குமாரபுரம், வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் சூசை பெனிஸ்டர் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், முதலூர் கிராமத்தைச் சார்ந்த ஜான்சன் (வயது 22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் போலீஸார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொழிற்சாலை நிறைந்த பகுதிகளான அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு கள்ளத்தனமாக செயல்படும் கிடங்குகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.