இலங்கையிலும் கலப்படம் செய்து அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை;

#SriLanka #Fuel #prices
இலங்கையிலும் கலப்படம் செய்து அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை;

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஒரு சிலர் எரிபொருளை சேகரித்து வேறு சில திரவங்களுடன் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவ்வாறான விற்பனை நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டாமெனவும், அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தரமற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பில் பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தமது வாகனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த பலரை பொலிசார் சோதனை நடாத்தி கைது செய்துள்ளதோடு, அது தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.