விவசாயத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளே அவசியம்: மாவட்ட விவசாய சம்மேளனம்.

#SriLanka #Lanka4
Shana
2 years ago
விவசாயத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளே அவசியம்: மாவட்ட விவசாய சம்மேளனம்.

தற்போதைய நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் மூலோபாயம் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வவுனியா மாவட்ட விவசாய சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இன்று எரிபொருளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் எதிர்காலத்தில் உணவுக்காக அலையப்போகும் அவலநிலை காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் செய்த தவறினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றையே இன்று இறக்குமதி செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பொருளாதார பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிடம் கடன் வாங்குகின்றார்களே தவிர விவசாயத்தை வலுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகாட்டல்களை யாரும் வழங்கவில்லை. எனவே எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.

விவசாயிகளான நாங்கள் தோட்டச்செய்கைக்கான எரிபொருள் இல்லாமல் அல்லல் படுகின்றோம். எனவே எமக்கான மண்ணெண்ணெய் மற்றும் டீசலை தந்துதவுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியாவை பொறுத்தவரை எரிபொருளில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலமே பயிர்செய்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இதனால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நாட்டுக்காகப் பெருமளவு மரக்கறிகளை உற்பத்தி செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இங்கு 9 கமநலசேவை நிலையங்கள் இருக்கின்றன.

எனவே அவற்றிற்கு நேரடியாக எரிபொருளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனூடாக ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தேவையான எரிபொருளை இலகுவில் நாங்களே விநியோகிப்போம்.

அதன் மூலம் விவசாயிகள் அலைந்து திரியும் நிலையை நிவர்த்தி செய்ய முடியும். எனவே எமக்கு இதனை செய்து தாருங்கள் நாம் முன்னுதாரணமாக அதனை செய்து காட்டுகின்றோம்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அதனை பதுக்கி மாபியாக்கள் போல செயற்படுகின்றனர். இந்த பதுக்கல் விடயத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ் ஊடகசந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் செ.சிறிதரன், செயலாளர் இ.பகிரதன்,பொருளாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.