500 மில்லியன் டொலர் கொடுத்தது யாருக்கு? - மத்திய வங்கியிடம் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

Prathees
2 years ago
500 மில்லியன் டொலர் கொடுத்தது யாருக்கு? - மத்திய வங்கியிடம் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

ஜனவரி 18, 2022 திகதியிட்ட சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்ட நபர்கள் மற்றும் தரப்பினர் பற்றிய விரிவான அறிக்கையை இலங்கை மத்திய வங்கி 2022 ஜூலை 25 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை அன்றைய தினம் வரை  நீடிக்குமாறு மேலதிக நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தனிப்பட்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்ட போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு இதற்கு முன்னர் மூன்று தடவைகள் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது

அவர்  நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் கோரிக்கை விடுத்தார்.