இன்றைய வேத வசனம் 05.07.2022: கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புரிதலும் வரும்.
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புரிதலும் வரும்.
நீதிமொழிகள் 2:6
1373ஆம் ஆண்டில், நார்விச்சின் ஜூலியன் 30 வயதாக இருந்தபோது, அவள் நோய்வாய்ப்பட்டு ஏறத்தாழ மரிக்கும் தருவாயில் இருந்தாள். அவளுடைய போதகர் அவளுக்காக ஜெபித்தபோது, இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணர்ந்த அவளுக்கு தேவன் பல தரிசனங்களைக் கொடுத்தார்.
அற்புதவிதமாக உடல் நலம் தேறிய பிறகு, அடுத்த இருபது வருடங்கள் தேவாலயத்தின் ஒரு பக்க அறையில் தனிமையில் வாழ்ந்து, ஜெபித்து, தன்னுடைய அனுபவத்தை நினைத்துப் பார்த்தாள். “அவருடைய அன்பே அர்த்தமுள்ளது” என்று அவள் முடித்தாள். அதாவது, கிறிஸ்துவின் தியாகம் தேவனின் அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு.
ஜூலியனின் வெளிப்பாடுகள் பிரபலமானவை. ஆனால் தேவன் அவளுக்கு வெளிப்படுத்தியதை ஜெபத்துடன் செய்ய அவள் செலவழித்த நேரத்தையும் முயற்சியையும் மக்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அந்த இருபது வருடங்களில் தேவனுடைய தெய்வீக ஞானத்திற்காய் விண்ணப்பித்து, அவருடைய பிரசன்னத்தின் மேன்மையை அவள் அறிய முயன்றாள்.
அவர் ஜூலியனுக்கு செய்ததுபோலவே, வேத வசனங்களின் மூலமாகவும், அவரது மெல்லி சத்தத்தின் மூலமும், ஒரு பாடலின் பல்லவி அல்லது அவரது பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு மூலம்கூட தேவன் தம் மக்களுக்கு கிருபையுடன் தம்மை வெளிப்படுத்துகிறார்.
இது நிகழும்போது, நாம் அவருடைய ஞானத்தையும் உதவியையும் நாடலாம். இந்த ஞானத்தை தான் சாலொமோன் ராஜா தன் மகனுக்கு, “நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,” (நீதிமொழிகள் 2:1) ஆலோசனை கூறுகிறார். அவ்வாறு செய்தால், “தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்” (வச. 5) என்றும் அறிவுறுத்துகிறார்.
தேவன் நமக்கு பகுத்தறிவையும் புரிதலையும் தருவதாக வாக்களிக்கிறார். அவருடைய குணாதிசயங்கள் மற்றும் வழிகளைப் பற்றிய ஆழமான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நாம் அவரை அதிகமாக கனப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் முடியும்.