எனக்கென இருந்த ஒரே வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது – ரணில்

Prabha Praneetha
2 years ago
எனக்கென இருந்த ஒரே வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது – ரணில்

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமக்கென இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜுலை 09ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் பின்னர் போராட்டம் முடிந்து வெளியேறும் வெளியாட்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொலிஸார் தன்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாலையில் தானும் மனைவியும் வீட்டைவிட்டு வெளியேறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே, ​​தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டமை தமக்கு தெரியவந்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும் தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும் அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என தெரிவித்துள்ள ரணில்,  எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள் ஹிட்லரின் சிந்தனையைக் கொண்டவர்கள் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவிற்குள்ளான வேளையில் தான் நாட்டைக் கைப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பலவீனமான நிர்வாக முறைமையினால், இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரு சில நாட்களில் மீளப்பெற முடியாது எனவும், அதனை மீட்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசையில் மக்கள் அவதிப்படுவதை தான் காணுவதாகவும் அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!