மீனவரின் பெற்றோலை கைப்பற்றிய கடற்படை
மன்னார் கடற்கரையில் மீனவரிடம் கடற்படையினர் கைப்பற்றிய பெற்றோலை காணவில்லை என மீனவர் ஒருவர் கவலை தெரிவிக்கின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மன்னார் கரையில் 10ஆம் திகதி மாலை 3 மணியளவில் 6 கான்களில் தலா 50 லீற்றர் வீதம் பெற்றோல் படகில் ஏற்றத் தயாரான நிலையில் கடற்படையினர் வந்து பறிமுதல் செய்தனர். எமது மீனபிடிப் படகு இயந்தி்ம் 40 குதிரை வலுக்கொண்டது.
தற்போது மண்ணெண்ணையை காண முடியவில்லை என்பதனால் பெற்றோலில் இயக்குகின்றேன். இவ்வாறு நானும் எனது நண்பர்கள் படகும் கடல் தொழிலிற்கு புறப்பட தயாரான நேரமே கடற்படையினர் எம்மிடம் இருந்த பெற்றோலை பறிமுதல் செய்தனர்.
12 கான்களில் பெற்றோல் இருந்தமையினால் இவை இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிவித்தே வழக்கு தாக்கல் செய்ய முற்பட்டனர். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள நாம் தயாரானபோது எமது பெற்றோல் பொலிசாரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்தனர்.
அதற்கமைய நாம் பொலிஸ் நிலையம் சென்றால் தம்மிடம் 3 கான்களில் 115 லீற்றர் பெற்றோல் மட்டுமே தந்துள்ளதனால் மாறுபட்ட தகவலின் கீழ் முறைப்பாட்டை பதிவு செய்ய பொலிசார் மறுக்கின்றனர்.
இந்த தகவல்களை நான் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். நான் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டும் கடற்படையினர் செய்துள்ள செயலை எவ்வாறு கூறுவது என்றே தெரியவில்லை.
வேலியே பயிரை மேயும் நாட்டில் நாம் சட்டத்தை மீறியதாக எமது பெற்றோலை பறித்த கடற்படையினர் 485 லீற்றர் பெற்றோலை ஆட்டையை போட்டுவிட்டனர். இதனை யாரிடம் கூறுவது என்றும் தெரியவில்லை என்றார்.