பதவி காலம் முடிவதற்குள் நாட்டை விட்டு தப்பியோடிய முதல் ஜனாதிபதி
இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்றைய தினம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வரலாற்றில் இடம் பிடித்திருந்தார்.
அதே போன்று தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து விலகும் முதலாவது ஜனாதிபதியாகவும் கோட்டாபய ராஜபக்ச வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. குறுகிய காலப்பகுதியில் மக்களின் வெறுப்பையும் அவர் பெற்றிருந்தார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிலையில், ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
தொடர்ந்து மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜூலை 13ம் (இன்றைய தினம்) திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதன்படி தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதனை பாதுகாப்பு செயலாளர் ஊடாக சபாநாயகருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் ருவன்வெலி மஹாசாயா வளாகத்தில் பதவியேற்பு
2019 நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சத்து இருபத்து நான்காயிரத்து இருநூற்றி ஐம்பத்து ஐந்து (6,924,225) வாக்குகளையும் மொத்த வாக்கில் 52.25 சதவீத வாக்குகளையும் பெற்று நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2019 நவம்பர் 18ம் திகதி அனுராதபுரம் ருவன்வெலி மஹாசாயா வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் 7வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.