ஈழத் தமிழர் விவகாரம் கூடிய விரைவில் விபரீதத்தில் முடியும். - ஐ.நா. கூட்டத்தில் ச. வி. கிருபாகரன்

Kanimoli
2 years ago
ஈழத் தமிழர் விவகாரம் கூடிய விரைவில் விபரீதத்தில் முடியும். - ஐ.நா. கூட்டத்தில் ச. வி. கிருபாகரன்

ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ. நா. மனித உரிமை சபை, தற்பொழுது தனது 50வது கூட்டத் தொடரை நடாத்தியுள்ளது. இக் கூட்டத் தொடரிற்கு ஆஜன்ரினாவின் ஐ.நா. பிரதிநிதி, திரு. பெடிறக்கோ வீலீகஸ், பிரந்திய சுற்றின் அடிப்படையில், 2022ம் ஆண்டிற்கான தலைவராக கடமையாற்றுகிறார். 

ஐ.நா.மனித உரிமை சபை என்றவுடன், வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்களிற்கு, விசேடமாக பதிக்கப்பட்ட மக்களிற்கு, இச் சபையின் செயற்பாடுகள் பற்றி, தினமும் மிகவும் அக்கறையாக உன்னிப்பாக அவதானமாக பார்ப்பது வழமை. இவ் அடிப்படையில், இச் சபையினால், சிறிலங்கா விடயத்தில் இது வரையில் பல தீர்மானங்கள் படிப்படியாக, 2012ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பொழுதிலும், இவை எதுவும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு – அதாவது காணமல் ஆக்கப்பட்ட குடும்பத்தவர்கள், உறவினர்கள், நெருங்கியவர்களிற்கு - போர் முடிந்து ஏறக்குறைய பதின்மூன்று வருடங்காளகியும் ஆக்கப்பூர்வமாக எதுவும், செய்யப்படவில்லை.  

(இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் - 19/2, 22 மார்ச் 2012; 22/1, 21 மார்ச் 2013; 25/1, 27 மார்ச் 2014; 30/1, 1 ஒக்டோபர் 2015; 34/1, 23 மார்ச் 2017; 40/1, 21 மார்ச் 2019; 46/1, 23 மார்ச் 2021.  இதேவேளை S11/1, 27 மே 2009  தீர்மானத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்). 

இதே போன்றே – உறவினர்களை இழந்தவர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் பல தசாப்தங்களாக வாடும் தமிழ் கைதிகளின் நிலைமையும். சுருக்கமாக கூறுவதனால், சிங்கள பௌத்த அரசுகளினால், தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட - மனித உரிமை மீறல், போர் குற்றம், இன அழிப்பு போன்றவற்றிற்கு சரியான பரீகாரம் இன்றுவரை சர்வதேசத்தினால் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். 

நிற்க, இது பற்றி சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஐ.நா.வின் முக்கிய புள்ளிகளிடம் வினாவினால், பதில் மிகவும் விஜப்பிற்குரியது. காரணம் அவர்களை பொறுத்த வரையில் இன்று வரை சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் யாவும் மாபெரும் வெற்றிக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது. காரணம், முதலாவதாக சிறிலங்கா அரசின் சர்வதேச பரப்புரையை யாரும் குறைத்து கணிப்பிட முடியாது. இராண்டவதாக, நிட்சயம் எமக்கு எமது அழிவுகள் விபரீதங்கள் பெரிதானவை. ஆனால், அவர்களை பொறுத்தவரையில்,  ஐ.நா.வின் அங்கத்துவ நாடுகளான 193வுடன், அடுத்து பார்வையாளராக உள்ள 2 நாடுகளையும் சமனாக தாம்நடத்த வேண்டும் என்பது அவர்களது விவாதம். அத்துடன் சர்வதேச செயற்பாட்டாளர் பார்வையில், சிறிலங்காவின் விடயங்கள் சர்வதேச நீதியை நோக்கி முன்னேறி செல்கிறது. 

இவர்களின் விவாதங்களில் ஒன்று – ஆர்மெனியா படுகொலை இன அழிப்பு. இதை உலகம் ஏற்று கொள்வதற்கு எழுபது வருடங்கள் சென்றுள்ளது என்பது உண்மை. 

யாதார்தம் என்னவெனில், போராட்ட காலங்களில் சிறிலங்கா அரசுகளின் பரப்புரைக்கு நிகராக சென்ற எமது சர்வதேச பரப்புரை, மிக அண்மை காலமாக பின் தங்கியே காணப்படுகிறது என்பதற்கு மேலாக, சர்வதேசம் ஏற்க கூடியதாக எம்மவர்களின் செயற்பாடுகள் காணப்படவில்லை என்பது யாதார்தம். 

மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்பு 

எது என்னவானாலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளான -   சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பாகம், ஐ.சி.யே. போன்ற சில சர்வதேச அமைப்புகளின் முன்னெடுப்பினால் பல வெற்றிகளை நாம் மனித உரிமை சபையில் கண்டுள்ளோம்.  

தற்போதைய 50வது கூட்ட தொடர், சிறிலங்கா விடயத்தில் முக்கியம் அற்று காணப்பட்டாலும், எமது தொடர்ச்சியான வேலை திட்டம், என்றும் தொடர வேண்டும். இவ் அடிப்படையில், விசுவாசமான உண்மையான நேர்மையான புலம்பெயர்வாழ் செயற்பாட்டாளர்கள் பலர் - பிரான்ஸ், சுவிஸ்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து, ஐ.நா.வில் தமது வழமையான சர்வதேச பரப்புரை செயற்பாடுகளில் இம்முறையும் ஈடுபட்டிருந்தனர்.  

இவ் அடிப்படையில், ‘ராடோ’ என்ற மனித உரிமை அமைப்பினால் ஜெனிவாவில் நடைபெற்ற தகவல் பரீமாற்றக் கூட்டத்தில், “சிறிலங்காவின் தற்போதைய நிலை, ஆபிரிக்க நாடுகளிற்கு ஓர் எச்சரிக்கை” என்ற தலைப்பில்,  பிரித்தானியா தமிழர் பேராவையின் செயலாளர் நாயகம், திரு வி. ராவிகுமார்,  தமிழீழ மக்களின் சரித்திரம், சமூக பொருளாதார அரசியல் விடயங்களை பல ஆதரங்களுடன் உரையாற்றியிருந்தார். இக் கூட்டத்தில் வேறுபட்ட நாடுகளை சார்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டு  கருத்துகளை தெரிவித்தனர். 

இதேவேளை, சுவிஸ்லாந்து லூற்சான் மாநிலத்து தமிழ் சங்கம் சார்பாக, சில பல்கலைகழக மாணவ மாணவிகள், ஐ.நா.மனித உரிமை சபை செயற்பாடுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் வரவேற்கபட வேண்டிய விடயம்.  

இதேவேளை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் திருமதி மீசேல் பாட்லேற்றுக்கும், எனக்குமான சந்திப்பு நடைபெற்றது. இவ் சந்திப்பில், என்னால் மிக அண்மையில் வெளியிடபட்ட, “நீதியை நோக்கிய செயற்பாடு…..(Reaching towards justice……)” என்ற நூலின் ஆங்கில பிரதியை, திருமதி மீசேல் பாட்லேற்றுக்கு, உத்தியோக ரீதியாக கையழிக்கப்பட்டதுடன், மிக சுருக்கமான உரையாடலும் இடம்பெற்றது. 

சிறிலங்கா அரசின் சார்பாக, கடந்த 2012ம் ஆண்டு முதல், ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தந்து, தமிழர்களின் வேலை திட்டங்களை குழப்புபவர்கள், இவ்முறை சமூகம் அளிக்காத காரணத்தினால், யாவருடைய வேலை திட்டங்களும்; சுமூகமாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. 

ஈழம் தமிழர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகவுள்ள இவ் வேளையில் – விதண்டாவாதங்களும், பழம் கதைகள் கதைத்து,  காலத்தை கழிப்பதும் கவலைக்குரிய விடயம்.  யாவரும் இப்படியான படலங்களில் ஈடுபடுவர்களேயானால், ஈழத் தமிழர் விவகாரம் கூடிய விரைவில் விபரீதத்தில் முடியும்.