குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - இரா.சாணக்கியன்
குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குருந்தூர் மலையில் விகாரை கட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த காணொளியில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது. வடக்கில் சிங்களவர்கள் இருக்கக்கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். போராட்டக்காரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள்.
குருந்தூர் மலையில் உள்ள விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
நாட்டை முன்னேற்றவும், ஊழல் மோசடியை ஒழிக்க வேண்டும் எனவும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். மனிதாபிமானத்துடன் கருத்துரைக்கும் நபர்கள் வடக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க அவதானம் செலுத்தவில்லை.
தெற்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களினால் மக்கள் பொருளாதார ரீதியில் பயனடைகிறார்கள். வடக்கில் பெரும்பாலான தொல்பொருள் சின்னங்கள் உள்ளன. 600 தொல்பொருள் சின்னங்கள் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் தொல்பொருள் சின்னங்களை அபிவிருத்தி செய்தால் வடக்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.
இதற்கு ஏன் தமிழ் தலைமைகள் என குறிப்பிட்டுக் கொள்கிறவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. தெற்கில் ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள், வடக்கில் தனி ஈழம் தொடர்பில் கருத்துரைத்து பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதன்படி, “நாங்கள் இருவரும் வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றோம். குறிப்பாக குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவேதான் எங்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையினை இந்த தேரர் முன்னெடுத்துள்ளார். தற்போது இலங்கையில் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக ஒருமித்து பயணிக்கும் நிலையில் இவ்வாறான சிலரின் செயற்பாடுகளினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.
இதன்காரணமாகவே இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு நாம் தடைகளை ஏற்படுத்துகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.