ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு!
னைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ‘இந்த நாட்டை’ மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றபோது, நாளொன்றுக்கு 5 மணி நேர மின்வெட்டால் பொருளாதாரம் சரிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மின்வெட்டு 3 மணிநேரமாக குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டு, நாட்டின் எரிவாயு தட்டுப்பாடும் தீர்க்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என ஏற்கனவே தான் அறிவித்ததாகவும் எனினும் டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என்றும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் பெற்றோலும் விநியோகிக்கப்படும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் நாட்டிலும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த பதில் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என விளக்கமளித்த அவர், பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19வது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சமூகத்திற்குள் இருப்பதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் நியாயமான கோரிக்கைகளைக் கொண்ட அமைதியான போராட்டக்காரர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.