கொழும்பிலிருந்து தாமாக முன்வந்து வெளியேற அவுஸ்திரேலியா முடிவு
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து, நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறுகிய அறிவித்தலில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, எல்லா நேரங்களிலும், தமது தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு அதன் பிரஜைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமது பிரஜைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும்” என்று அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
இலங்கையில் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் மற்றும் திட்டமிட்ட மின்வெட்டு போன்றவற்றையும் சந்திக்க நேரிடும் என சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரெலியாவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.