குடிமைச் சுதந்திரங்களில் விரைவான சரிவு- புதிய பட்டியலிலும் சேர்க்கப்பட்ட இலங்கை!

Nila
2 years ago
குடிமைச் சுதந்திரங்களில் விரைவான சரிவு- புதிய பட்டியலிலும் சேர்க்கப்பட்ட இலங்கை!

2022 ஜூலை 13 அன்று இலங்கையில் பிரதமரின் அலுவலகத்தாலும்,ஜூலை 18 அன்று பதில் ஜனாதிபதியாலும் அவசரகால நிலையைப் பிரகடனப்பட்டமை தொடர்பில்,உலகளாவிய குடியியல் சமூகக் கூட்டமைப்பு (CIVICUS) தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சமூகத்தின் அதிருப்தியை நசுக்குவதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையை மதிப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை அதிகாரிகளை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே சுமார் 100000 எதிர்ப்பாளர்கள் கூடியிருந்ததை அடுத்து அமைதியான அதிகார மாற்றத்தை' உறுதிப்படுத்துவதற்காக ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகுவதாக 2022 ஜூலை 9 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.

அத்துடன் அவர் இலங்கையை விட்டு வெளியேறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்தார்.

இது ஜூலை 13 அன்று ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தை முற்றுகையிட வழிவகுத்தது.

காவல்துறையினரும் துருப்புக்களும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரையை பயன்படுத்தி அவர்களை கலைத்தனர்.

எதிர்ப்பாளர்கள் முக்கிய அரச தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறி ஒளிபரப்பையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர்.

பொது பாதுகாப்பு பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் நிமித்தம் ஜூலை 18 அன்றும் இலங்கை முழுவதும் மற்றொரு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் போராட்டங்களை ஒடுக்க அதிகாரிகள் மீண்டும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

முந்தைய அவசரகால நிலைகளின் போதுஇ ​​நூற்றுக்கணக்கானோரின் தன்னிச்சையான கைதுகள், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகப்படியான பலாத்காரம் மற்றும் தடுப்புக்காவலில் சித்திரவதை அல்லது மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.

எனவே அதிகாரிகள் அவசரகால நிலையை உடனடியாக நீக்க வேண்டும்.

அடிப்படை சுதந்திரங்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அத்துடன் எதிர்ப்பாளர்களை இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று உலகளாவிய சிவில் சமூகக் கூட்டமைப்பின் ஆசிய பிராந்திய சட்டத்தரணி மற்றும் பிரசார அதிகாரி கொர்னேலியஸ் ஹனுங் கோரியுள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மீறல்கள் ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் குடியியல் சமூகத்தின் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

அவை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களை குறிவைத்தல் மோசமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் துன்புறுத்தல் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குடும்பங்கள் மற்றும் குடியியல் சமூக அமைப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மோதல் கால குற்றங்களுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கத் தவறின.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மற்றும் பாதுகாப்புப் படையினரால் இதர துஷ்பிரயோகங்களை நடத்துவது என்ற போலிக்காரணத்தின் கீழ் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகப்படியான பலத்தை தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்

எந்தவொரு புதிய அரசாங்கமும் இந்த மீறல்கள் அனைத்திற்கும் ஒரு சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கொர்னேலியஸ் ஹனுங் கூறினார்.

இதேவேளை 2022 ஜூனில் குடிமைச் சுதந்திரங்களில் விரைவான சரிவைக் கண்ட நாடுகளின் கண்காணிப்புப் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டதாக .உலகளாவிய சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.