நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளுக்கு விலை போனார்களா?
நாடாளுமன்றத்தில் அதிபரை தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் தெரிவு பிரதிபலித்தது என, ஒருவர் நம்பினால் அது கட்டுக்கதை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, இன்றைய வாக்கெடுப்பு மக்களின் அபிலாஷைகளின் சிதைந்த பிம்பமாகும் என விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட வாக்குகளின் கலவையானது நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறிய அனுரகுமார திஸாநாயக்க, பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய முரண்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, 10 சுயேட்சை அரசியல் குழுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தால். நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும 113 வாக்குகளை விட அதிகமாக பெற்றிருப்பார்.
எனினும் இந்த அரசியல் கட்சிகள் கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டன என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தீர்க்கமான தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளுக்காக விலை போயுள்ளதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
புதிய மக்கள் ஆணையை பெறும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.