சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது - அமெரிக்கா

Kanimoli
2 years ago
சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது - அமெரிக்கா

சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவின் பிரதானி பில் பர்ன்ஸ் (Bill Burns) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீனா, கூடுதல் வட்டிக்கு இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் பெற்றுக் கொண்டு முதலீடுகளை செய்தமையே இலங்கைய இலங்கையின் பொருளாதாரச் சரிவிற்கான பிரதான காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இந்த நிலைமை ஏனைய நாடுகளுக்கு நல்லதொரு பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.

தூர நோக்கமின்றி கண்மூடித்தனமாக பந்தயம் கட்டுவதனைப் போன்று இலங்கை சீன கடன் முதலீடுகளை செய்ததன் விளைவே இன்றைய அனர்த்தங்களுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து மத்திய கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகள் விழிப்பாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கடன் பெற்றுக்கொண்டு பாரியளவில் உட்கட்டுமான வசதிகளுக்காக முதலீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை நிர்மானிக்க பெற்றுக் கொண்ட கடனை செலுத்த முடியாது அதனை சீன நிறுவனமொன்றுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.

200 மில்லியன் டொலர் சீன கடனைக் கொண்டு நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தில் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு கூட வருமானம் கிடைக்காத நிலை காணப்பட்டது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.