இனப்பிரச்சினைக்கான தீர்வினை புதிய ஜனாதிபதி வழங்குவார்
இனங்களுக்கிடையே புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை தீர்ப்பதற்கான நெறிமுறைகளை புதிய ஜனாதிபதி கையாளர்வார் என நம்புவதாக, புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்து செய்தியில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது, உங்களது அரசியல் சாணக்கியமும் அரசியல் முதிர்ச்சியுமே இன்றைய வெற்றிக்கு காரணமாகிறது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளீர்கள். அதற்கு எமது வாழ்துக்களை எங்களது மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறோம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், மக்களின் அன்றாட வாழ்வியல் சுமைகள், அரசியல் இஸ்திரமற்ற நிலைகளில் இருந்து இலங்கை விரைந்து மீண்டு வர செயலாற்றுவீர்கள் என திடமாக நம்புகிறோம்.
இனங்களுக்கிடையே புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை தீர்ப்பதற்கான நெறிமுறைகளை கையாள வேண்டும் என தமிழ்மக்கள் சார்பாக கேட்டு நிற்கின்றோம் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.