எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீர் சந்திப்பு! பிரதமராகிறார் சஜித்?
கோட்டபாய ராஜபக்ச கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய நிலையில் இலங்கையின் 8வது நிறைவேற்றதிகாரம் உடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நீதியமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக அவர் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல் தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த சந்திப்பை அடுத்து பிரதமராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.