நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கா?ரணில்

Kanimoli
2 years ago
நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கா?ரணில்

நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி, பேரணிகளில் சென்று அதிகாரத்தில் இருக்கும் திருடர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தனர்.

எனினும் அந்த திருடர்கள் இணைந்து தமது பாதுகாப்புக்காக அதிபர் ஒருவரை நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டுக்கான புதிய அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டை மீட்டெடுக்க அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் மக்களின் நிலைப்பாடுகள் பிரதிபலித்ததா என்று கேட்க விரும்புகிறேன். 2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது இருந்த நிலைமைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டவர்களே தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

அன்று மக்களுக்கு இருந்த நிலைப்பாட்டுக்கு அமைய போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் பிரதிபலிக்கவில்லை.

நாட்டு மக்கள் அன்று தமது நிலைப்பாடுகளுக்கு அமைய தெரிவான அதிபரை நாட்டில் இருந்து விரட்டியுள்ளனர். அந்த அதிபருடன் தெரிவானவர்களே நாடாளுமன்றத்தில் அதிகளவில் இருக்கின்றனர்.

திருடர்களை விரட்டவே மக்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர். ஆனால், திருடர்கள் இணைந்து ஒருவரை தெரிவு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தூய்மையான அரசியலை எதிர்பார்த்தனர்

இதன் காரணமாகவே கறைபடியாத கரங்களை கொண்டுள்ள சஜித் பிரேமதாசவும் டலஸ் அழகப்பெருமவும் இணைந்து ஒரு பயணத்தை செல்ல தயாராகினர். எமது கட்சி இதற்காக ஐந்து சதத்தை கூட செலவிடவில்லை.

மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய செயற்படும் அதிபரே எமக்கு வேண்டும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கான காரணம் என்ன? நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கா? நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கவா?

இல்லை, எரிந்து போன தமது சொத்துக்களை நிர்மாணித்துக் கொள்ளவே வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் அதனை எதிர்க்கவில்லை.

தமது பாதுகாப்பு, தமது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது மற்றும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.