ஐ.நா. அமைதிப்படை களமிறங்கும் ஆபத்து
போராட்டக்காரர்களின் தூரநோக்கற்ற - மதிநுட்பம் அற்ற போராட்ட அணுகுமுறையாலேயே ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார், - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, போராட்டக்காரர்கள்மீது அவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்தபோது, பதிலடி கொடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவில்லை.
எனினும், நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டபோது, ஊரடங்கு சட்டம், அவசரகால சட்டம் போன்றவற்றை பிறப்பித்தும், பதிலடி கொடுத்தும், அதனை பாதுகாக்க பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்புகின்றனர்.
அதேபோல ரணில் வந்ததால்தான் தமக்கு பாதுகாப்பு என ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் எம்.பிக்கள் கருதுகின்றனர். எம்.பிக்களின் வீடுகளை சுற்றிவளைத்து, தீயிட்டு இதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது யார்? போராட்டக்காரர்கள். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு வாக்களிப்பதற்கு இதுவே பிரதான ஓர் காரணமாக அமைந்தது." - எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, அரசியல் நிகழ்ச்சி நிரல், தூரநோக்கம் என்பன இல்லாமல், தோடுகளை குத்திக்கொண்டு வீரர்களாக செயற்பட்ட போராட்டக்காரர்களால் இறுதியில் ரணில்தான் ஜனாதிபதியாகியுள்ளார். புதிய ஜனாதிபதியாலும், அவருக்கு வாக்களித்தவர்களாலும் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இந்நாட்டை மீட்க முடியாது என கருதுகின்றோம்.
ஆக மீண்டும் பிரச்சினைகள் வெடிக்கக்கூடும். மேற்குலக சக்திகள் எதிர்பார்க்கும் 'Bloodbath ' - இரத்த ஆறு உருவாகக்கூடும். அவ்வாறான சூழ்நிலை ஐ.நா. அமைதிப்படை அல்லது இந்திய தலையீட்டுக்கு வழிவகுக்கும்.
இதனை தடுக்கவே சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது நாம் அச்சுறுத்தலான கட்டத்தில் உள்ளோம் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.