போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்டது ஜனாதிபதி பணியாற்ற கூடிய சூழலை ஏற்படுத்தவே - பொலிஸ்

Prabha Praneetha
2 years ago
போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்டது ஜனாதிபதி  பணியாற்ற கூடிய சூழலை ஏற்படுத்தவே - பொலிஸ்

ஜனாதிபதிக்கு பணியாற்ற கூடிய பொருத்தமான சூழலை உருவாக்கி கொடுப்பதற்காகவே ஜனாதிபதி செயலகத்தில் இருந்த போராட்டகாரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சநதிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் செயலகங்களில் தற்போது பணிகளை செய்ய முடியாது நிலைமை காணப்படுகிறது.

இதனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோபூர்வ பணிகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டகாரர்கள் சில முறை அறிவித்திருந்த போதிலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை.

போராட்டகாரர்கள் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு பொலிஸா் 9 முறை அறிவித்திருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக எந்த பதிலையும் வழங்கவில்லை.

அரச பொது சொத்தான கட்டடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு தங்கியிருக்க முடியாது. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட காலிமுகத்திடலில் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அதற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சில தற்காலிக கூடாரங்களை அப்புறப்படுத்த நேரிட்டது எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.