ஈஸ்டர் வழக்குகளில் இருந்து ரணிலை விடுவிக்குமாறு சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு மைத்திரி தரப்பு எதிர்ப்பு

Prathees
2 years ago
ஈஸ்டர் வழக்குகளில் இருந்து ரணிலை விடுவிக்குமாறு சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு மைத்திரி தரப்பு எதிர்ப்பு

ஈஸ்டர் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அந்த வழக்குகளின் பிரதிவாதிகளான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் எதிர்ப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நேற்று (26) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பதனால், அவர் பிரதிவாதியாகச் செயற்படுவதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன மற்றும் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில்  முன்வைத்த போது மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  ஷம்மி பெரேரா,  அத்துடன் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோகர டி சில்வா, சாலிய பீரிஸ் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோரும் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பிரதிவாதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதன்படிஇ இன்று (27ம் திகதி) காலை 9.45 மணிக்கு  மைத்திரிபால சிறிசேனவை ஆஜர்படுத்துவதற்கு நீதிபதிகள் குழாம் திகதி நிர்ணயித்ததுடன், எஞ்சிய மனுதாரர்களை எதிர்வரும் 2ம் திகதி ஆஜர்படுத்துவதற்கான திகதியையும் நிர்ணயித்துள்ளது.