கோட்டபயவின் சிங்கப்பூர் விசா மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற போது அவருக்கு வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும், கொழும்பு புறநகரில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் மீண்டும் வசிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் சிங்கப்பூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு திட்டமிட்ட நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக அவரின் வருகை பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ அறிக்கையினை சமர்ப்பித்து மேலும் இரு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி பெற்றுள்ளார். அந்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டின் நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.