இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய எதிர்கொள்ளப்போகும் சிக்கல்! – சர்வதேச ஊடகம் வெளியிட்ட தகவல்
தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு திரும்பியதும் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் (Strait Times) ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என இலட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் அதிபரின் மாளிகையை ஆக்கிரமிக்கும் அளவிற்கு தீவிரமடைந்ததை தொடர்ந்து, இலங்கையின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பி சென்றார்.
மேலும் அங்கு இருந்தே தனது ராஜினாமா கடிதத்தையும் சாநாயகருக்கு அனுப்பிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இலங்கையின் ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த தகவலில், பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்று கோரியுள்ளன.
அதேபோன்று 2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ அடக்குமுறையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக கோட்டாபய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் மிகப் பெரிய சிறுபான்மையினரான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதேவேளை “கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வந்தால், அவரை இலங்கைக்குள் பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம்” என பெயர் வெளியிட விரும்பாத அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.