நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 3 கல்வி வலயங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

Reha
2 years ago
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 3 கல்வி வலயங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஹங்குராங்கெத்தை மற்றும் வலப்பனை ஆகிய வலயங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரவு அபாய முன்னெச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், கஹவத்தை, நிவித்திகலை, இம்புல்பே, குருவிட்ட, மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின், யட்டியாந்தோட்டை, அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள பிரதேசங்களில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.