பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது - ரணில் விக்ரமசிங்க

Kanimoli
2 years ago
பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது - ரணில் விக்ரமசிங்க

பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது என அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் கடைசி நேரத்தில் வன்முறையுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (04) பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும். 22வது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.