அடுத்த 6 மாதங்கள் கடினமானது: என்ன நடந்தாலும் IMF போகிறேன்: ஜனாதிபதி

Prathees
2 years ago
அடுத்த 6 மாதங்கள் கடினமானது: என்ன நடந்தாலும் IMF போகிறேன்: ஜனாதிபதி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்பான பிரேரணை நல்லதோ கெட்டதோ யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

எந்தவொரு தரப்பினரும் எதிர்க்கும் பட்சத்தில் அவர்களின் மாற்று யோசனைகளை கேள்வி கேட்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பழைய பொருளாதார மாதிரியை இனியும் பயன்படுத்த முடியாது என்றும், புதுமையான முறையில் சிந்தித்து உலகளாவிய மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முதலில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் எனவும் இரண்டாவதாக நிலையான கடனைப் பெறுவது மிக முக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு யாரேனும் ஆலோசனைகள் இருந்தால் உதவியாக இருக்கும். நிச்சயமாக நாம் அந்த ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பிரேரணைகள் தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை பிரச்சனையாகும்.

அடுத்த 6 மாதங்களில் கண்டிப்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். சர்வதேச நாணய நிதியமும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறது என  ஜனாதிபதி மேலும்  தெரிவித்துள்ளார்.