தன் இருப்பிடத்தை வெளியிட்டார் கோட்டாபய! அடுத்த முடிவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்
தான் இன்னமும் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் தாய்லாந்துக்கு செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் ஊடகம் ஒன்று கோட்டாபய ராஜபக்சவை பிரத்தியேகமாக தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோட்டாபய ராஜபக்ச தற்போது வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பதாகவும், எனினும், அவர் தாய்லாந்து செல்வதற்கு எதிர்ப்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்த நிலையில் ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை அதிபர் என்ற வரலாற்றையும் கோட்டாபய உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சென்ற கோட்டாபயவுக்கு 15 நாட்கள் அங்கு தங்கியிருக்க விசா வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்து விசா காலம் முடிவடைந்த பின்னர் மேலும் 15 நாட்களுக்கு கோட்டாபயவின் விசா காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், கோட்டாபயவின் சிங்கப்பூர் விசா காலம் நாளையுடன் முடிவடைகின்றது.
இவ்வாறிருக்க, கோட்டாபய சிங்கப்பூரில் இருந்து இன்றைய தினம் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு பயணிக்கவுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனீ சங்கரட் (Tanee Sangrat) இந்த விடயத்தினை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடிய இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதில் தாய்லாந்து அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவதற்காக தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. கோட்டாபய ராஜபக்சவுக்கு இதுவொரு தற்காலிக தங்குமிடம் மாத்திரமே, இங்கு இருந்துகொண்டு அவருக்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை, மேலும் இது அவருக்கு புகலிடம் கோருவதற்காக ஒரு நாட்டைக் கண்டறிய உதவும் என்று அவர் குறிப்பிட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல உள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இருப்பினும், 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்த பின்னர் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி வோல்ட் ஸ்ட்ரீட் ஊடகத்திற்கு போட்டியளித்த ரணில் விக்ரமசிங்க, “கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான காலம் இது என தாம் நம்பவில்லை” எனக் கூறியிருந்தமை நினைவூட்டத்தக்கது.