இன்றைய வேத வசனம் 12.08.2022: கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் - யோவேல் 1:19
1717ஆம் ஆண்டு வடக்கு ஜரோப்பாவில், ஒரு மாபெரும் புயல் வீசியது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கபட்ட ஒரு தேசத்தின் அரசாங்கம் ஆச்சரியமான தீர்மானத்தை எடுத்ததென வரலாறு தெரிவிக்கிறது.
குரோனிஞ்சன் தேசத்தின் நகர அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக “ஜெப நாள்” ஒன்றை ஒழுங்குசெய்தனர். ஜனங்கள் அனைவரும் திருச்சபையில் கூடி, “பிரசங்கங்களை கேட்டு, பாடல்களை பாடி, மணிக்கணக்காய் ஜெபித்தனர்” என்று ஒரு சரித்திர நிபுணர் பதிவுசெய்கிறார்.
யோவேல் தீர்க்கதரிசியும், அனுமதிக்கப்பட்ட பேரழிவினை சந்தித்து தேவ சமுகத்தில் மன்றாடிய ஜனங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறார். திரள்கூட்ட வெட்டுக்கிளிகள் தேசத்தைச் சூறையாடி, “அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து” பாழாக்கியது (யோவேல் 1:7). யோவேலும் அவருடைய ஜனங்களும் இந்தப் பேரழிவினால் ஆழ்ந்த துயரத்திற்குள்ளாகி, “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (யோவேல் 1:19) என்று உதவிக்காய் கெஞ்சினர்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாவத்தின் காரணமாகவும் விழுந்து போன இவ்வுலகத்திநிமித்தமும், வட ஐரோப்பியரும், யூதரும் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 8:20-22). அந்தத் தருணங்களில் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிப்பதே சரியானதென்பதை அறிந்து செயல்பட்டனர் (யோவேல் 1:19). தேவன் அவர்களைப் பார்த்து, “ஆதலால் நீங்கள் இப்பொழுதே … உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று சொன்னார்.
நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும் பேரழிவுகளையும் நாம் சந்திக்க நேரிட்டால், கண்ணீரோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடத்திற்குத் திரும்பக்கடவோம். அவர் “இரக்கமும்” “மிகுந்த கிருபையுமுள்ளவர்” (வச. 13), நம்மை அவரிடமாய் சேர்த்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் நமக்கு அருளுவார்.