மன்னார் மாவட்டத்தில் சடுதியாக கொரோனா தொற்று அதிகரிப்பு - வைத்தியர் ரி.வினோதன்

#Mannar #Covid 19
Prasu
2 years ago
மன்னார் மாவட்டத்தில் சடுதியாக கொரோனா தொற்று அதிகரிப்பு - வைத்தியர் ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில்  கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை   காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மொத்தம் 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தமாக 6 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 40 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றானது சாதாரண தடிமன்,தலையிடி,தலைபாரம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படுகின்றது.

இவர்களில் அதிகமானவர்கள் வீடுகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.அதற்கு அமைவாக எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விட மிகக் குறைவாக இருக்கும்.

103 நோயளர்கள் எம்மால் கண்டறியப்பட்டால் இதை விட 7 அல்லது 8 மடங்கு நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வருகை தராமல் சுய சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளில் தங்கி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திறிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.