தப்பியோடிய கோட்டாபய கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு
சிறிலங்கா படைத்தரப்பின் அறிவுரைகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கைகளை கோட்டாபய ராஜபக்ச அப்பட்டமாக புறக்கணித்தாரா என்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவரைப் பாதுகாக்க நட்பு நாடுகளின் உதவியை நாடுவது நல்லதல்ல எனவும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச மக்கள் புரட்சியை கண்டு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார். யாரும் அவரை அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை. போராட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு கோரினர். எனினும் பயத்தின் காரணமாக, வெளிநாடு செல்ல வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட முடிவாகவே இருந்தது.
கடந்த மே 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடந்த பின்னர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கிடைத்தது.
ஏன் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் இவ்வாறு பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதே தற்போதைய கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரச் சரிவு எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் கொழும்பில் இருந்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், தற்போதைய இக்கட்டான நிலையை அவர் தவிர்த்திருக்கலாம்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு இப்படியொரு அவமானமான கதி ஏற்படும் என்பதை அவரது எதிரிகள் கூட எதிர்பார்க்கவில்லை.
அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, பல்வேறு பிரச்சினைகளுக்குத் தனது முழு அதிகாரத்தையும் ஆளுமையையும் கொண்டு செயற்பட்டார். எனினும் அதிபரானபோது, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
அரச சேவை அதிகாரிகளை புறக்கணித்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்தார். கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களை துண்டித்துக்கொண்டார், அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. அடிமட்டத்தில் உள்ள சாதாரண மக்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்த பிலிசந்தர என்ற 'மக்களை சந்திப்போம்' திட்டத்தை கைவிட்டார்.
லஞ்சமும் ஊழலும் பெருக அனுமதித்தார். அவரது சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் பறித்து வெளிநாடுகளில் குவித்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தோல்வியுற்ற அதிபராக பதவியை விட்டு விலக மாட்டேன் என்று அவர் சபதம் செய்தார். இறுதியில், சொந்த நாட்டின் பாதுகாப்பை புறக்கணித்து சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது உயிருக்கு பயந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, இராணுவ கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோட்டாபய ராஜபக்ச, அதிபராக இருந்த போது பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைத் தளபதிகளின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
எனினும், இத்தனை அதிகாரங்களையும், இராணுவத்தினரின் உதவியையும் அவர் பெற்றிருந்தாலும், தனது இராணுவத்தையோ அல்லது சிறிலங்காவின் இராணுவ கட்டமைப்பு மீதோ அவர் நம்பிக்கை கொள்ளவில்லையா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
சிறிலங்காவிலிருந்து அவர் தப்பித்து வெளிநாடுகள் தஞ்சமடைந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அளவிற்கு சிறிலங்கா இராணுவ கட்டமைப்பை அவர் நம்பாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வியாக எழுந்து நிற்கிறது.