அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் - சஜித் பிரேமதாச
நாட்டை முன்னேற்றுவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று(14) காலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“நாட்டில் போசாக்கு குறைபாடு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு போசாக்கு பொதி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிகளை வழங்குவது கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்தை வழங்குவதை விட பெரிய பொறுப்பாக மாறியுள்ளது.
மேலும், 70-80 அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் அதிக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கின்றனர். அத்தகைய நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டுக்கு சேவை செய்வதற்காக பதவிகள் தேவையில்லை.” என கூறியுள்ளார்.