மொட்டு கட்சிக்கு தோல்வி உறுதி - சுனில் ஹந்துன்நெத்தி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றிகொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று(14) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றிகொள்ள முடியாத காரணமாகவே அரசு தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது.
மேலும் அதிகாரத்தைத் தக்கவைக்க வேறு வழிகளை அரசு தேடுகின்றது. ஆனால், தற்போது தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது எனவே குறுகிய காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்.”என கூறியுள்ளார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடையில் இதுவரையில் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போது, தற்போதைய ஜனாதிபதிக்கே, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை, 2025 ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஆதரிக்கும் யோசனையை, கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் உறுப்பினர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.