தனியாக வசித்து வந்த பெண்ணொருவர் வெட்டிக்கொலை
கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண் வீட்டில் தனியாக வசித்தார். அவரது பெரிய வீட்டின் அருகே ஏராளமான கடைகளை வாடகைக்கு வழங்கி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது இரண்டு பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று மதியம் 2 மணியளவில் குறித்த பெண் வசித்த வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பான நபர் ஒருவர் கத்தியுடன் வெளியில் வருவதைப் பார்த்ததாகவும், அவரது கை அறுபட்டு இரத்தம் கசிந்ததனையும் அவதானித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை எனவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டமையினால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பொலிஸாரிடம் தகவல் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்