ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி இந்நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றார்: எதிர்க்கட்சித் தலைவர்

Mayoorikka
2 years ago
ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி இந்நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றார்: எதிர்க்கட்சித் தலைவர்

ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி கூட இந்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நூலக மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாhர்.

நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மொட்டு அமைச்சர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கின்றனர்.

இந்நாட்டின் கலைஞர்களையும், மாணவர்களையும், இளம் தலைமுறையினரையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக அடக்கி ஒடுக்கும் கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது.

இந்நாட்டு மக்கள் தாங்கள் அனுபவித்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே எழுந்து நின்றனர். நீதியான நாட்டையே விரும்பியிருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சு மற்றும் பதவிகளைப் பெறுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எடுத்த தீர்மானம் நூறு வீதம் சரியானது என்பது இப்பொழுது புரிகின்றது.

நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில் அது தொடர்பாக எந்தவித உணர்வும் இன்றி அரசாங்கம் 37 பிரதி அமைச்சர்களை நியமித்து, மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளது.

நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில், அது தொடர்பாக எந்தவித உணர்வும் இன்றி அரசாங்கம் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்து, மக்கள் மீது மேலும் சுமையை திணித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட எந்தவொரு நாடும் செய்யாத விடயங்களை எமது நாடு முன்னெடுத்து வருகின்றது. இதன்மூலம் மக்கள் மேலும் அதலபாதாளத்துக்கே தள்ளப்படுகின்றனர்.

நாட்டு மக்கள் இவ்வாறான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள போது, அமைச்சர்கள் தமது விருப்பு வெறுப்புகளை தேடி பதவி ஏலம் விடுகின்றனர். இதுவொரு வெற்று அமைச்சுச் சூதாட்டமாகவே உள்ளது.