தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படவுள்ளது நுரைச்சோலையில் உள்ள 3வது மின் உற்பத்தி இயந்திரம்

Prathees
2 years ago
தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படவுள்ளது நுரைச்சோலையில் உள்ள 3வது மின் உற்பத்தி இயந்திரம்

திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும்  நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03வது மின் உற்பத்தி இயந்திரம் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜெனரேட்டரின் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், தேவையான அளவு நிலக்கரி இருப்பு இருப்பின், அடுத்த 6 மாதங்களில் வெட்டுக்கள் இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தீர்க்கப்படும் வரையில் இலங்கைக்கு அவ்வாறான நிலக்கரியை வழங்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைவாக நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் தனது தலைமையில் இடம்பெற்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்று மின்வெட்டு இருக்காது என்றும், நாளையும் நாளை மறுதினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மின்வெட்டு காலம் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.