அபிவிருத்திக்கு இடையூறான சுற்றறிக்கைகளை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Prathees
2 years ago
அபிவிருத்திக்கு இடையூறான சுற்றறிக்கைகளை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் தடைகள் இருப்பின், சுற்றறிக்கையில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முதலீட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் முன்மொழியப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் ஜேக்கப் அவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்திய முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் எழுந்துள்ள தடைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முன்னைய அரசாங்கங்கள் அவ்வப்போது வெளியிட்ட சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.