உலகில் 3வது இடத்திற்கு இலங்கை ரூபாய் வீழ்ச்சி

Prathees
1 year ago
உலகில் 3வது இடத்திற்கு இலங்கை ரூபாய் வீழ்ச்சி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உள்ளூர் நாணயத்தின் பெறுமதி மிக அதிக வீதத்தால் வீழ்ச்சியடைந்ததன் அடிப்படையில், இலங்கை ரூபாயானது உலகில் 03 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கை ரூபாவின் பெறுமதி 47.79 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்வீவ் ஹாங்க் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

ஜிம்பாப்வேயின் நாணயம் அமெரிக்க டொலருக்கு நிகரான உள்ளூர் நாணயத்தின் மதிப்பைக் குறைத்த உலகின் முதல் நாணயமாக மாறியுள்ளது.

இது 73.33 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

57.65 சதவிகிதம் மதிப்பிழந்த கியூபாவின் நாணயம், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் உள்ளூர் நாணய அலகுகளின் தேய்மானத்தில் உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான சர்வதேச கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் கடன் வழங்குனர்களுக்கு முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி ஒப்புதலைப் பெறுவதற்கும் ஏனைய உலகளாவிய நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் வெற்றியை அடைவது மிகவும் முக்கியமானது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை எதிர்நோக்கும் இலங்கை, அந்த நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெற வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.