சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது-நிமல் சிறிபால டி சில்வா

Kanimoli
1 year ago
சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது-நிமல் சிறிபால டி சில்வா

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் எதுவுமில்லை. சேவையில் ஈடுபடுத்தப்படும் 23 விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கொரோனா தொற்று நோய் மற்றும் நாடு முழுவதும் பரவிய போராட்டங்கள் காரணமாக விமான பயணங்கள் குறைந்தன. இரத்மலானை மற்றும் பலாலி விமானங்களை திட்டமிட்டப்படி முற்றாக பிரயோசனப்படுத்த முடியாமல் போயுள்ளது.

பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை நடத்துவதாக சில விமான சேவை நிறுவனங்கள் வாக்குறுதி வழங்கின. எனினும் ஒரு விமானம் கூட அங்கு வரவில்லை.

எயார் இந்தியா நிறுவனம் பலாலிக்கான சேவையை நடத்த இணங்கியது. எனினும் அது நடக்கவில்லை.

மாலைதீவு விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து இரத்மலானை விமான நிலையத்திற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமும் தோல்வியடைந்துள்ளது.

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மாதம் 100 மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்ககிறது.

முதலீட்டாளர் ஒருவர் மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அரசாங்கம் அதனை ஆராயும் " எனக் குறிப்பிட்டார்.