இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் வன்முறை- உயிரிழந்தோர் எண்ணிக்கை 174ஆக உயர்வு

Prasu
1 year ago
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் வன்முறை- உயிரிழந்தோர் எண்ணிக்கை 174ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. 

இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். 

மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். 

இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி நிகோ அபின்டா கூறும்போது, "கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

34 பேர் மைதானத்துக்குள்ளே இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்தனர். மைதானத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிய ரசிகர்கள் கார்களையும் சேதப்படுத்தினர். 

மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறியபோது வாகனங்களை அடித்து நொறுக்கினர் என்றார்.